திவ்ய தேசம் 4 - திருவன்பில்
இந்த வைணவ தருத்தலம் லால்குடியிலிருந்து 8 கிமீ தொலைவில், கல்லணையிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்துப் பாதையில், அன்பில் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வைணவ திவ்ய தேசத்திற்கு, திருமாலயந்துறை, (மண்டூகமுனி இங்கு தொழுததால்) மண்டூகபுரி, (பிரம்மன் இங்கு வழிபடதால்) பிரம்மபுரி என்ற பெயர்களும் உண்டு. கொள்ளிடம் நதியின் வடகரையில் அன்பிலும், மறுகரையில் கோயிலடியும் (திருப்பேர் நகர்) அமைந்துள்ளன. காவிரி பாயும் பரப்பின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கபட்டினம் (கர்னாடக மாநிலம்), ஸ்ரீரங்கம், அன்பில், கும்பகோணம், இந்தளூர் (மயிலாடுதுறை) ஆகிய ஊர்கள் பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்று அறியப்படுகின்றன. இப்புண்ணியத் தலத்திற்கு பிரேமபுரி மற்றும் திரிவேணி (காவிரி, நிலத்தடியில் ஓடிய சாவித்திரி மற்றும் பல்குனி நதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பதால்) என்ற புராதனப் பெயர்களும் உண்டு.
வடிவழகிய நம்பி என்று அழைக்கப்படும் தலப்பெருமாள் கிழக்கு நோக்கி கிடந்த திருக்கோலத்தில் (புஜங்க சயனத்தில்) அருள் பாலிக்கிறார். தாயாருக்கு அழகியவல்லி (சுந்தரவல்லி) நாச்சியார் என்று திருநாமம். உத்சவ மூர்த்தி சுந்தரராஜப் பெருமாள் ஆவார். பெருமாள், தாயார் இருவருமே இங்கு சுந்தர சொரூபமாக காட்சியளிக்கின்றனர் ! விமானம் தாரக விமானம் என்றும், தீர்த்தம் மண்டூக புஷ்கரிணி என்றும் அறியப்படுகின்றன. அன்பிலில், சத்யவாகீஸ்வரரும், சௌந்திரநாயகியும் எழுந்தருளியிருக்கும் பிரசித்தி பெற்ற அன்பிலாலந்துறை சைவ திருத்தலமும் அமைந்துள்ளது.
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதியில் ஒரு பாசுரத்தில் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பாசுரத்தில், பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் உள்ள திருக்குடந்தை, திருவெ·கா, திருவள்ளூர், திருவரங்கம், திருப்பேர் நகர், திருப்பாற்கடல் மற்றும் திருவன்பில் ஆகிய ஏழு திருக்கோயில்களும் சுட்டப்பட்டுள்ளன. திருமழிசை பிரான், இவ்வேழு தலங்களில் பாம்புப் படுக்கையில் சயனித்திருக்கும் நெடிய ஆதி நாராயணனின் அடியில் தஞ்சமடைபவரின் உள்ளத்திலும் உணர்விலும் அப்பரந்தாமனே நிறைந்து அவர்களை ஆட்கொள்வான் என்று பாடுகிறார்.
2417@..
நாகத்தணைக் குடந்தை* வெ·கா திருவெவ்வுள்*
நாகத்தணை அரங்கம் பேரன்பில்*
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான்.
பிரம்மனும், வால்மீகியும் இங்கு திருமாலை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. அன்பில் திருத்தலம், இவ்விரு சிருஷ்டி கர்த்தாக்களுடன் தொடர்புடையது. அதாவது, பிரம்மன் ஸ்ரீமன் நாராயணனின் திருவடிவத்தை மனதில் கொண்டும், வால்மீகி முனி பெருமாளின் கல்யாண குணங்களை மனதில் கொண்டும், முறையே, உலக உயிர்களையும், அவற்றின் தன்மைகளையும், உலகில் வாழத் தேவையான பொருட்களையும் உருவாக்கினர். இந்த சிருஷ்டிக்குப் பின்னால், (பரந்தாமன் மேல்) அவர்களின் பேரன்பு காணப்படுவதால், இத்தலம் "அன்பில்" என்ற பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. உலகில் உள்ள அனைத்தும், அன்பு சார்ந்தவையே என்பதை இத்திருத்தலம் உணர்த்துகிறது !
மற்றொரு பழங்கதை, மண்டூக முனிவர் ஒரு முறை நீருக்கடியில் பெருமாளை நினைந்து கடும் தவத்தில் இருந்தபோது, கோபத்திற்கு பேர் போன துர்வாசர் அவ்வழி வந்ததை கவனிக்கத் தவறியதாகவும், வெகுண்ட அச்சின முனி மண்டூகரை தவளை உருவம் கொள்ளுமாறு சபித்ததாகவும், பின்னர் இத்தலத்தில் பெருமாளை வணங்கியதால் மண்டூகரின் சாபம் நீங்கியதாகவும், கூறுகிறது. அதனால் தான், குளம் மண்டூக புஷ்கரிணி என்று அழைக்கப்படுகிறது.
சோழர்களால் கட்டப்பட்ட ராஜகோபுரம் மூன்று நிலைகள் (3-tier) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் பல அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. சுந்தர சோழன், ஒவ்வொரு முறையும், போருக்குச் செல்வதற்கு முன், தன் உடைவாளை கோயிலின் த்வஜஸ்தம்பத்தின் முன் வைத்து, பெருமாளை வணங்கிச் சென்றதாக, இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சோழர்கள் இக்கோயிலுக்கு அளித்த மானியங்கள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளும் காணப்படுகின்றன.
என்றென்றும் அன்புடன்
பாலா
photo courtesy: Just.Clicking
* 235 *
18 மறுமொழிகள்:
பாலா
ஒவ்வொரு திங்களும் இதைப் பதிக்கிறீர்களா? இதை விருப்பப் பேழையில் (favorites) வைத்துக் கொள்ள வேண்டும்.
//பஞ்சரங்க ஷேத்திரங்கள்//
எனக்கு இது புது தகவல்.
//பிரசித்தி பெற்ற அன்பிலாலந்துறை சைவ திருத்தலமும் அமைந்துள்ளது.//
இதை நீங்கள் சொல்ல வேண்டுமே என்று நினைத்தேன். சொல்லி விட்டீர்கள் :-)
//மண்டூகரின் சாபம் நீங்கியதாகவும், கூறுகிறது//
மதுரை அழகரும் மண்டூகரின் சாபம் நீங்கத் தான் வைகையில் - இறங்குகிறார் இல்லையா?
//திருமஷிசை, சுட்டப்பட்டுள்ளன//
சிரமம் பாக்காது பிழை திருத்தி விடுங்களேன் ப்ளீஸ் :-)
kannabiran, RAVI SHANKAR (KRS),
nanRi !
//
//திருமஷிசை, சுட்டப்பட்டுள்ளன//
சிரமம் பாக்காது பிழை திருத்தி விடுங்களேன் ப்ளீஸ் :-)
//
????? I do not understand :(
//திருமஷிசை, சுட்டப்பட்டுள்ளன//
சிரமம் பாக்காது பிழை திருத்தி விடுங்களேன் ப்ளீஸ் :-)
//
????? I do not understand :( //
சாரி பாலா; சரியாக சொல்லவில்லை போலும். spelling mistake; எழுத்துப் பிழை திருத்தி விடுங்கள் என்ற பொருளில் சொன்னேன்.
திருமஷிசை=திருமழிசை
சுட்டப்பட்டுள்ளன=கட்டப்பட்டுள்ளன
kannabiran,
nanRi !
//திருமஷிசை=திருமழிசை
=கட்டப்பட்டுள்ளன
//
I will correct the first one. But I fail to understand what is wrong in the second one you pointed out :(
சுட்டப்பட்டுள்ளன = "Referred by"
Good post
Testing comment publishing !
பெருமாள் வடிவழகிய நம்பியே தான். வெகு நேரம் முதல் இரண்டு படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். மூலவர் தான் வடிவழகிய நம்பி தெரியும்; உற்சவர் அழகரசன் தான் – அழகரசன் என்றால் என்ன வடிவழகிய நம்பி என்றால் என்ன இரண்டுமே ஒன்று தானே. :-)
இதே மன்டூக மகரிஷியின் கதை இதே வடிவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் சித்திரைத் திருவிழாவிற்கும் கூறப்படுகிறது. பெருமள் வன்டியூர் சென்று கருட வாகனத்தில் மன்டூக மகரிஷிக்கு மோக்ஷம் அளிப்பார்.
ஏந்தச் சுந்தர சோழன் என்று தெரியுமா? இராஜராஜனின் தந்தையா? அவர்கள் சிறந்த சிவபக்தர்கள் ஆயிற்றே?
Kumaran,
vAngka, nanRi !
"""""நாகத்தணைக் குடந்தை* வெ·கா திருவெவ்வுள்*
நாகத்தணை அரங்கம் பேரன்பில்*
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான்""""""
இதில் குறிப்பிடப்பட்டுள்ள "திருவெவ்வுள் " பற்றி ஒரு குட்டி செய்தி.
எம்பெருமான் சாலிகோத்திர முனிவருக்கு காட்சியளித்து " வசிப்பதற்க்குறிய உள் எந்த உள் " (திரு எவ்வுள்?) என்று வினவியதால் இத்தலத்திற்கு திருவெவ்வளூர் எனப் பெயர் ஏற்ப்பட்டது.இதுவே இப்போது திருவள்ளூர்(அதேதான்..சென்னைக்கு அருகில்) எனப்படுகிறது :)
அன்புடன்...ச.சங்கர்
சங்கர். நான் கேக்கணும்ன்னு நெனைச்சேன். என் மனசறிஞ்சு நீங்களே சொல்லிட்டீங்க. :-)
Thanks, Sankara !
நன்றி குமரன் :)
நன்றி குமரன் :)
sankar,
One
//
நன்றி குமரன் :)
//
is enough, I guess ;-)
"திருவெவ்வுள் " பற்றி திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்று :
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்,
தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.
பிரம்மனையும் சிவனையும் படைத்து மூவரானாவனும், கீதோபதேசத்தை அருளியவனும், கரிய வண்ணம் கொண்டவனும், தர்மத்தின் தலைவனும், தேவர்களுக்கு அரசனும், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவனும், ஒப்பிலாத ஒருவனுமாய் இருந்தும் தன் அடியார்களுக்கு இனியவனும் ஆன என்னப்பன், எம்பெருமான், திருவள்ளூரில் கிடந்த திருக்கோலத்தில் ஆட்சி புரிகிறான் !
நேற்ரு தினமலரில் கூட இப்பெருமானின் படம் வெளியாகி இருக்கிறது :)
திருவன்பில் பதிவு திருவெவ்வுள் பதிவாக மாறிக் கொண்டிருக்கிறது. :-)
திருவெவ்வுள் பாசுரத்திற்கு நன்றி பாலா.
குமரன்,
நன்றி.
//ஏந்தச் சுந்தர சோழன் என்று தெரியுமா? இராஜராஜனின் தந்தையா? அவர்கள் சிறந்த சிவபக்தர்கள் ஆயிற்றே?
//
சுந்தர சோழன் (பராந்தக சோழன் II) ராஜராஜனின் தந்தை தான். சோழர்கள் சைவர்களாக இருந்த போதிலும், வைணவக் கோயில்களுக்கு பல கைங்கரியங்கள் செய்தவர்கள். சுந்தர சோழனின் தந்தை அரிஞ்சய சோழன் ஆவார்.
Post a Comment